தமிழாய்வுத்துறை

1981 முதல்

461 வெளியீடுகள்
59 பேராசிரியர்கள்
157 மாணாக்கர்
5 படிப்புகள்

தமிழாய்வுத்துறை

என்றுமுள தென்தமிழ் என நிலைபேறு பெற்ற தமிழ்மொழி உலகச் செம்மொழிகளில் இன்றும் உயிர்ப்புடன் திகழ்ந்து வருகின்ற மொழியாகும். கல்லா இளையோர்க்கும் கற்றறி மாந்தர்க்கும் எப்போதும் இன்பத்தை விளைவிக்கும் மொழியான தமிழ் உலகத் தோற்றத்தோடு ஒப்ப வைத்து எண்ணத்தக்கது. பாறைகள், கல்வெட்டுகளில் தொடங்கி, ஓலைச்சுவடிகள், அச்சுத்தாள்கள் வழியாக இன்று கணினித் திரையிலும் தனது வரலாற்றை எழுதுகின்ற கன்னித் தமிழாகவும் காட்சி அளிப்பது தமிழாகும். இத்தகைய பழம்பெருமையும் புதுப்பொலிவையும் ஒருங்கே பெற்ற தமிழை ஆயும் நோக்கத்துடன் பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழாய்வுத்துறை உருப்பெற்றது.

கி.பி.1882 முதல் 1934 வரை எஸ்.பி.ஜி. கல்லூரியாக இருந்த முதற்கால கட்டத்தில் பிச்சை இப்ராஹிம் புலவர், அமிர்தம் பிள்ளை, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி முதலான தமிழறிஞர்கள் இத்துறைக்குப் பெருமை சேர்த்தனர். நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை இத் தமிழாய்வுத்துறையின் மேனாள் மாணாக்கர் ஆவார்.

1966ஆம் ஆண்டு பிஷப் ஹீபர் கல்லூரி மீண்டும் தொடங்கப்பட்டது. 1968ஆம் ஆண்டுக்குப் பிறகு முனைவர் ப.ச.ஏசுதாசன் தலைமையில் ஐந்து பேராசிரியர்களைக் கொண்ட தமிழாய்வுத்துறை உருக் கொண்டது. 1981ஆம் ஆண்டு முதுகலைத் தமிழ் வகுப்பு தொடங்கப்பெற்றது. 1984இல் பகுதிநேர ஆய்வியல் நிறைஞர் படிப்பும், 1985இல் முழுநேர ஆய்வியல் நிறைஞர் படிப்பும் தொடங்கப் பெற்றன.1985, 1986ஆம் ஆண்டுகளில் முறையே பகுதிநேர, முழுநேர முனைவர்பட்ட ஆய்வுப் படிப்புகள் தொடங்கப் பெற்றன. 2018ஆம் ஆண்டு முதல் இளங்கலைத் தமிழ்ப் பட்டப் படிப்பும் நடத்தப் பெற்று வருகின்றது. முனைவர் ப.ச.ஏசுதாசனைத் தொடர்ந்து முனைவர் யோ.டென்னிசன் முதலான சிறப்பு வாய்ந்த தமிழறிஞர்கள் தமிழாய்வுத்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் சிறப்பாகப் பணியாற்றி, வழிநடத்தி வருகின்றனர். நூற்றைம்பது முனைவர்பட்டங்களும், அறுநூறு ஆய்வியல் நிறைஞர் பட்டங்களும் தமிழாய்வுத்துறையால் வழங்கப் பெற்றுள்ளன என்பது துறையின் ஆய்வுச் சிறப்பை விளக்குவதாகும்.

தமிழாய்வுத்துறையில் பயின்ற மாணாக்கர் கல்வித்துறை, அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் என அனைத்து நிலைகளிலும் பணி வாய்ப்பைப் பெற்றுள்ளது துறையின் மற்றுமொரு சிறப்பாகும். இத்துறையில் பயின்ற மாணவர்கள் ஐவர் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர்களாகப் பணியாற்றியிருப்பது தனிச்சிறப்பாகும்.

ஆய்வு மனப்பான்மையை வளர்த்தெடுக்கும் ஆசிரியர் கருத்தரங்கம் முதலான நிகழ்வுகள், மாணாக்கரின் கலை இலக்கியப் படைப்புத் திறமையை வெளிக்கொணரும் முத்தமிழ் விழா முதலான பண்பாட்டு நிகழ்வுகள், வகுப்புகளுக்கு வெளியே அறிவை வளர்த்தெடுக்கும் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் சமுதாயத்துடன் உள்ள நெருக்கத்தைத் தொடர்ந்து பேணும் விரிவாக்கப் பணிகள் போன்றவை துறையின் செயற்பாடுகளில் குறிப்பிட்டுக் கூறத் தகுவன. மாணாக்கரை நன்முறையில் சமுதாய அறத்துடன் வாழப் பயிற்சி அளித்து வழிகாட்டுவதே மற்றெதனினும் எமது துறையின் தலைசிறந்த செயலாக அமைகின்றது.

தொலைநோக்கு

கிராமப்புற ஏழை மாணவர்கள், குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகப்பிரிவினர், குடும்பத்தின் முதல் பட்டதாரி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தார் போன்றோர் துறையில் சேர்ந்து பயில முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவர்களுக்குத் தரமான இலக்கியக் கல்வியைக் கொடுத்துத் தன்னம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது. ஆராய்ச்சிப் பட்டங்களைப் பயில அரசு தரும் உதவித்தொகைகளை மாணவர்கள் பெற வழிகாட்டப்படுகிறது. பட்டப்படிப்புகளை முடித்த மாணவர்கள் தகுந்த வேலைவாய்ப்பிற்கு நெறிப்படுத்தப்படுகின்றனர்.

பொதுநோக்கு

  • சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலக்கியத்துடன் அறிவு, ஆளுமை, நல்லொழுக்கம் ஆகியவற்றையும் கற்பித்தல்.
  • மானுட விழுமியங்களையும் கிறித்தவச் சேவைமனப்பாங்கையும் மாணவர்களுக்கு முழுமையாக எடுத்துரைத்தல்.
  • நவீன அறிவியலையும் சமூக அசைவியக்கத்தையும் அறம்பிறழாமல் எதிர்கொண்டு வாழும் ஒழுங்கை மாணவர்களிடம் ஏற்படுத்துதல்.

வழங்கப்படும் படிப்புகள்

  • இளங்கலைத் தமிழ் (B.A. Tamil)
  • முதுகலைத்தமிழ் (M.A. Tamil)
  • ஆய்வியல் நிறைஞர் (M.Phil.)
  • முனைவர்பட்டம் (Ph.D)

பட்டயம் / சான்றிதழ் படிப்புகள்

  • இதழியல் பட்டயப் படிப்பு (Diploma in Journalism)

துறையின் சிறப்பான செயற்பாடுகள்


  • ஒவ்வொரு பருவத்திலும் நடத்தப் பெறும் ஆசிரியர் கருத்தரங்கு
  • கல்லூரியின் அனைத்துத் துறைகளையும் ஒன்றிணைக்கும் முத்தமிழ் விழா
  • வாராந்திர இலக்கிய / திறனாய்வு வட்டங்கள்
  • விரிவாக்கப் பணிகள்

தொடர்புக்கு:

  • முனைவர் பா. ராஜ்குமார்
  • துறைத்தலைவர்
  • தமிழாய்வுத்துறை
  • Pஇணைப்பு எண்கள் : +251 (காலைப் பிரிவு), +151 (மாலைப் பிரிவு)
  • அலைபேசி : +91 98942-56377